

சென்னை: தனது வீட்டின் சொத்து ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கிய வீரராகத் திகழ்ந்தவர் தினேஷ் கார்த்திக். தமிழகத்தைச் சேர்ந்தவரும், விக்கெட் கீப்பருமான இவர், தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது, இவர் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசிக்கிறார்.
இந்நிலையில், இவர் தேனாம்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் நேற்று முன்தினம் புகார் மனு அளித்தார். அதில், ``எனக்குச் சொந்தமான மற்றொரு வீடு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கறையில் உள்ளது. அந்த வீட்டின் சொத்து ஆவணங்கள் போயஸ் கார்டனில் உள்ள எனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்திருந்தேன்.
ஆவணங்கள் மாயம்: சொத்து ஆவணங்களை நகல் எடுப்பதற்காகக் கடந்த 28-ம் தேதி போயஸ் கார்டனில் உள்ள ஒரு கடைக்கு எனது காரில்கொண்டு சென்றேன். அங்கு சென்று பார்த்தபோது, நான் எடுத்துச் சென்ற ஆவணங்கள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
எனவே, காணாமல்போன எனது வீட்டின் சொத்து ஆவணங்களைக் கண்டுபிடித்து தர வேண்டும்'' எனப் புகாரில் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். முதல்கட்டமாக தினேஷ் கார்த்திக் வீட்டிலிருந்து அவர் சென்றகடை வரை உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து அதன் அடிப்படையில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.
ஏற்கெனவே 2 நாட்களுக்கு முன்பு, நடிகர் ராம்கி தனது வீட்டின் சொத்து ஆவணங்கள் மாயமானதாக இதே தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.