

சென்னை: கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளால் நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அரசியல்வாதிகளுக்கு எதிரான பழைய வழக்குகளை மீண்டும் விசாரிப்பதால் தன்னை சிலர் வில்லனாக பார்ப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார். தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்குகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அடுத்த படியாக முறைகேடு வழக்கில் விடுவிக்கப்பட்ட தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துள்ளார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006 -11 திமுக ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2012-ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் மார்ச் மாதம் விடுவித்து தீர்ப்பளித்தது.
இதேபோல, 2001-06 அதிமுக ஆட்சிக் காலத்தில் சத்துணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த பா.வளர்மதி அளவுக்கு அதிகமாக சொத்துக் குவிப்பி்ல் ஈடுபட்டதாக அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் திமுக ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், பா.வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து 2012-ல் தீர்ப்பளித்தது.
இந்த இரு தீர்ப்புகளையும் மறு ஆய்வு செய்யும் நோக்கில் இந்த வழக்குகளை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரித்தார்.
அப்போது நீதிபதி, ‘‘கடந்த சில ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையின் நடைமுறை படுமோசமாக உள்ளது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு எதிரான இந்த வழக்கில் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரித்து ஆதாரங்களை திரட்டியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை, திடீரென ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைக்க கோருகிறது. அதன்படி அவரை விடுவித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே நடைமுறைதான் அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கிலும் பின்பற்றப்பட்டுள்ளது. தங்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ள யாரும் விரும்புவதில்லை. கீழமை நீதிமன்றங்களின் இதுபோன்ற செயல்பாடுகளை பார்க்கும்போது, நீதித்துறையை அந்த ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என தோன்றுகிறது. அதேபோல, அரசியல்வாதிகளுக்கு எதிரான இந்த பழையவழக்குகளை நான் மீண்டும் விசாரிப்பதால் என்னை சிலர் வில்லனாகப் பார்க்கின்றனர். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்குகளை தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை” என்றார்.
இந்நிலையில், இந்த வழக்குகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர்பதிலளிக்க வேண்டுமென நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் அக்.12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.