Published : 07 Dec 2017 10:33 AM
Last Updated : 07 Dec 2017 10:33 AM

பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவது மட்டுமல்ல ஊட்டச்சத்து குறைபாடும்கூட குழந்தைகள் உரிமைப் பிரச்சினைதான்: ‘ஊடகமும் குழந்தைகள் உரிமையும்’ கருத்தரங்கில் தகவல்

சென்னையில், நேற்று ஏ.சி.ஜே. ஊடகவியல் கல்லூரியும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஓர் அங்கமான ‘யுனி செப்’ அமைப்பும் இணைந்து ‘ஊடகமும் குழந்தைகள் உரிமையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தின. அதில், குழந்தைகள் உரிமை தொடர்பாகப் பணியாற்றும் பல்வேறு அறிஞர்களும் பத்திரிகையாளர்களும் இதழியல் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

திரிக்கப்படும் உண்மைகள்

குழந்தைகள் உரிமை ஆய்வாளர் வித்யாசாகர் பேசும்போது, “நாட்டின் பல இடங்களிலும் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பான பிரச்சினைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளைச் செய்தியாக்கும்போது, பல்வேறு ஊடகங்களின் போட்டியால், உண்மைகள் திரிக்கப்படுகின்றன.

மேலும், பிரச்சினை நிகழும் அன்றைய தேதியில் மட்டும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அந்தப் பிரச்சினைக்குப் பிறகான நாட்களில், அதில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பல செய்தியாளர்கள் பொருட்படுத்துவதில்லை. இதனால் பெரும்பாலான நேரம், அந்தப் பிரச்சினைக் கான உண்மையான காரணம் வெளியே தெரியாமல் போய் விடுன்றன” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, தமிழகத்தில் வடமாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடி வருபவர்களின் குழந்தைகளுக்கு நிறைய பிரச்சினைகள் நேரிடுகின்றன. ஆனால், அவற்றுக்குப் போதிய அளவில் ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை என்றார்.

குழந்தை பார்வையில்லை

அந்தக் கருத்தரங்கில் பத்திரிகையாளர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்ட விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தை ‘தி இந்து’ ஆங்கில இதழின் ‘ரீடர்ஸ் எடிட்டர்’ ஏ.எஸ்.பன்னீர்செல்வன் நெறியாள்கை செய்தார்.

அந்த விவாதத்தில் ‘தி இந்து’ ஆங்கில இதழின் மூத்த பத்திரிகையாளர் ரம்யா கண்ணன் பேசும்போது, “கடந்த 15 ஆண்டுகளாக, குழந்தைகள் உரிமை தொடர்பான செய்திகள், ஊடகங்களில் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன. ஆனால், அந்தச் செய்திகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் பலருக்கு, குழந்தைகள் உரிமை தொடர்பான சட்டங்கள், நுணுக்கங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிவதில்லை” என்றார்.

அனைவரது கவனத்துக்கு...

எழுத்தாளர் நந்தினி கிருஷ்ணன் பேசும்போது, “குழந்தைகள் உரிமை தொடர்பான செய்திகளின்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர், ஊர், பள்ளி, ஒளிப்படம் உள்ளிட்ட அடையாளங்களை வெளிப்படுத்தக் கூடாது. அந்தப் பிரச்சினைகளைச் செய்தியாக்கும் பத்திரிகையாளர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும். விருதுகளுக்காக மட்டுமே இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது” என்றார்.

செய்தியாக்கும் முன்பாக...

பத்திரிகையாளரும் ‘காமன் காஸ்’ அமைப்பின் இயக்குநருமான விபுல் முத்கல் பேசும்போது, “குழந்தைகள் உரிமை தொடர்பான பிரச்சினைகளைச் செய்தியாக்குவதற்கு முன், அந்தப் பிரச்சினை தொடர்பான சட்டங்கள், விதிமீறல்கள், அதற்கு முன்பு வந்த ஆய்வுகள் போன்றவற்றைப் படியுங்கள். பெரும்பாலான நேரம், அந்தப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பார்வை, செய்திகளில் பிரதிபலிப்பதில்லை. குழந்தைகள் உரிமை மீறல் பிரச்சினையைத் தனிமைப்படுத்திப் பார்க்கக் கூடாது. குழந்தைகள் உரிமை மீறல் என்பது ஒரு குழந்தை பாலி யல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவது மட்டுமே அல்ல. ஊட்டச்சத்துக் குறைபாடு, இலவச கட்டாயக் கல்வி உரிமை போன்றவையும் குழந்தைகள் உரிமைப் பிரச்சினைகள்தான்” என்றார்.

எதிர்கொண்ட சவால்

இந்தக் கருத்தரங்கில் ‘தி இந்து’ ஆங்கில இதழின் சிறப்புச் செய்தியாளர் சுபேதா ஹமீது, ‘தி நியூஸ் மினிட்’ இணைய இதழின் ஆசிரியர் தன்யா ராஜேந்திரன், குழந்தைகள் உரிமை தொடர்பாகப் பணியாற்றும் ‘துளிர்’ அமைப்பைச் சேர்ந்த வித்யா ரெட்டி, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழின் முதன்மை நிருபர் ஏகதா ஆன் ஜான் ஆகியோர் குழந்தை கள் உரிமை தொடர்பான பிரச்சினைகளைச் செய்தியாக்குவதில் தாங்கள் எதிர்கொண்ட சவால்களைப் பகிர்ந்துகொண்டனர். முன்ன தாக ‘யுனிசெப்’ அமைப் பின் தமிழகம் மற்றும் கேரள மாநிலக் கிளையின் தலைவர் ஜாப் ஜக்கரியா, கருத்தரங்குக்கு வந்தவர்களை வரவேற்றுப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x