விபத்துக்குள்ளாகும் வாகனங்களில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்க பிரத்யேக வாகனம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: சாலை விபத்துகளில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக்கொள்வோரின் உயிரை காப்பதற்காக தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள ‘வீரா’ மீட்பு வாகனத்தின் பயன்பாட்டை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாலை விபத்துகளை குறைப்பதிலும், விபத்தில் சிக்குவோரின் உயிரை காப்பதிலும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை முன்னோடியாக விளங்குகிறது. சாலை விபத்தால் ஏற்படும்உயிரிழப்பை குறைக்க, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்துக்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், சாலை விபத்துகளில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நமது சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலை விபத்துகளில் சேதமடைந்தவாகனங்களில் சிக்கிக் கொள்வோரின் உயிரை காப்பதற்கு, தனித்துவமான, முன்னோடியான மீட்பு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, சாலை விபத்தில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்ளும் பாதிக்கப்பட்ட நபர்களை, தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற காவல் குழுவினர் உதவியுடன் மீட்பதற்கான ஒரு முன்னோடி திட்டம். அவசரகால மீட்பு மற்றும் விபத்துகளில் இருந்துமீட்கும் வாகனம் என்று பொருள்படும் வகையில், இந்த வாகனத்துக்கு ‘வீரா’ (VEERA - Vehicle for Extrication in Emergency Rescue and Accidents) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே இது முதல் முயற்சி ஆகும். இந்த முயற்சி ஹுண்டாய் குளோவிஸ் மற்றும் இசுசூ மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கார்ப்பரேட் சமூகபொறுப்பு திட்டமாகும். தமிழக நெடுஞ்சாலை துறை, சென்னை ஐஐடி ஆகியவை இந்த திட்டத்துக்கு தங்கள் நிபுணத்துவம் மற்றும் பங்களிப்பை அளித்துள்ளன.
இந்த நிலையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் ‘வீரா’ மீட்பு வாகனத்தின் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். வாகனம் செயல்படும் விதம் குறித்து காவல் துறையினர் அளித்த செயல்முறை விளக்கத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் பங்கேற்றனர்.
ரவீந்திரநாத் தாகூர் சிலை: தமிழ் அறிஞர்கள், விடுதலை உணர்வை வளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தியாகிகளின் நினைவுகளை போற்றும் வகையில் தமிழக செய்தித் துறை சார்பில் சிலைகள், நினைவுச் சின்னங்கள் அமைத்து பராமரிக்கப்படுகின்றன. அந்த வகையில், புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை நினைவுகூரும் விதமாக அவருக்கு சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
கொல்கத்தாவில் பிறந்தரவீந்திரநாத் தாகூர் இசையமைப்பாளர், எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகம் கொண்டவர். இவர்இயற்றிய ‘கீதாஞ்சலி’ எனும் கவிதைத் தொகுப்பு நூலுக்காக ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையை பெற்றார். இவர் இயற்றிய ‘ஜன கண மன’ பாடல்தான் நம் நாட்டின் தேசிய கீதமாக விளங்குகிறது.
இத்தகைய சிறப்புமிக்க கவிஞர்தாகூருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை ராணி மேரி கல்லூரியில் செய்தித் துறை சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, முதல்வர் ஸ்டாலின்நேற்று திறந்து வைத்து, அதன் அருகே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன்,ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர்ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
