Published : 09 Sep 2023 06:15 AM
Last Updated : 09 Sep 2023 06:15 AM
திருவள்ளூர்/திருக்கழுகுன்றம்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 536 கனஅடியாக அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம், திருவள்ளூர், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன்காரணமாக சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 536 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், நேற்று காலை நிலவரப்படி 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 1,866 மில்லியன் கனஅடியாக இருந்தது.
இதேபோல், 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் மழை காரணமாக விநாடிக்கு 429 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் தற்போது 2,688 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதேபோல் 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் மற்றும் மழைநீர் என, விநாடிக்கு 610 கனஅடி நீர் வருகிறது. இதனால் 2,337 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மேலும் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 48 கனஅடியாக உள்ளதால், நீர் இருப்பு 128 மில்லியன் கனஅடியாக உள்ளது. இதனை நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலாற்று தடுப்பணைகள்: இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாலாற்றங்கரையோர கிராமங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், செங்கல்பட்டு அடுத்த பாலாற்றில் நீரோட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாயலூர் மற்றும் வல்லிபுரம் பகுதிகளில் உள்ள தடுப்பணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுப்பணித் துறையினர், நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT