

சென்னை: சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், முப்படைகளில் சேரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நட்புநாடுகளைச் சேர்ந்த ராணுவஅதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இங்கு பயிற்சி முடித்த அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது. இதைமுன்னிட்டு, பயிற்சி அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத் தலைவர் லெப்.ஜெனரல் சஞ்சீவ் சவுகான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஜிம்னாஸ்டிக் சாகசத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், இந்திய ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தற்காப்புக் கலையை செய்துகாட்டினர்.
மேலும், தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு உடற்பயிற்சி செய்தல், நெருப்பு வளையங்களுக்குள் புகுந்து தாண்டுதல், குதிரையை வேகமாக இயக்கியபடி தரையில் உள்ள பொருட்களை சேகரித்தல், குதிரையில் அமர்ந்தபடிஉயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பானையை உடைத்தல், நெருப்பில் எரியும் ஓடுகளை கைகளால் உடைத்தல் போன்ற சாகசங்களை நிகழ்த்தினர்.
சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் பாராட்டிய லெப். ஜெனரல் சஞ்சீவ் சவுகான், அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பயிற்சி முடித்த அதிகாரிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்று, சாகச நிகழ்ச்சிகளை உற்சாகத் துடன் கண்டு ரசித்தனர்.