Published : 09 Sep 2023 05:32 AM
Last Updated : 09 Sep 2023 05:32 AM
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக, போரூர் ஏரி அருகேசாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
போரூர் ஏரி உள்ள அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவருக்குச் சொந்தமாக 2 அடுக்கு மாடி வீடு உள்ளது. வீட்டின் மாடியில் உள்ள 3 வீடுகளில் ஒரு வீட்டில் மகன் ஜெரால்டு, மருமகள் அஸ்வினி, பேரன் ஷியாம், பேத்தி யாஷிகா ஆகியோரும், மற்றொரு வீட்டில் 2-வது மகனும், இன்னொரு வீட்டை வாடகைக்கும் விட்டு உள்ளார். கீழ்தளத்தில் உள்ள வீட்டில்பார்த்தியநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பார்த்தியநாதன் வீட்டை ஒட்டிய பகுதியில் மெட்ரோ ரயில் பணிநடைபெற்றது. அங்கிருந்த ராட்சத கிரேனை ஊழியர்கள் இயக்கினர். அப்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கிரேன் பார்த்தியநாதனின் மகன் ஜெரால்டு குடியிருக்கும் வீட்டின் மீது வேகமாக மோதியது. இதில் வீட்டின் தடுப்புச் சுவர்கள் மற்றும் மேல்பகுதி ஷீட்டுகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து விழுந்தன.
அந்த சமயத்தில் வீட்டிலிருந்த அஸ்வினி தனது மகன்ஷியாம், மகள் யாஷிகாவை வெளியே உள்ள கழிப்பறைக்கு அழைத்துச் சென்றிருந்தார். இதனால், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அஸ்வினியின் கணவரான ஜெரால்டும் வெளியே சென்றுஇருந்ததால் அவர் உயிர் தப்பினார். கிரேன் மோதியதில் வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில் பீரோ, கட்டில், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும், கிரேன் மோதியதில் அருகிலிருந்த மற்ற 2 வீடுகளின் சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டது.
அங்கு திரண்ட மக்கள் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர். விபத்து குறித்து மெட்ரோ அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT