Published : 09 Sep 2023 05:04 AM
Last Updated : 09 Sep 2023 05:04 AM

டெல்டா, தென் மாவட்டங்களில் விரைவில் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள்: தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

சென்னை: மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான திறன் மிகு மையங்கள் விரைவில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் உருவாக்கப்படும் என்றுதொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறினார்.

தமிழ்நாடு மேம்படுத்தப்பட்டஉற்பத்திக்கான திறன்மிகு மையம், தமிழ்நாடு திறன்மிகு மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான மையம், தமிழ்நாடு மின்னணுமயமாக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான மையம் மற்றும் சேர்க்கை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் ஆகியவற்றை தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா ஆய்வு செய்தார்.

அப்போது, இந்த மையங்களின் செயல்பாடுகள், அங்குமேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள், தொழில்முனைவோருக்கான பயிற்சிகளை ஆய்வு செய்ததுடன், `நான் முதல்வன்' திட்ட மாணவர்களுக்கான பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதையடுத்து, டேன்கேம், டேன்சேம் நிறுவனங்கள் சார்பில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் டிஆர்பி.ராஜா கூறியதாவது:

மேம்படுத்தப்பட்ட உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. பொருளாதாரத்தில் கடந்த 10ஆண்டுகளில் இழந்த நிலைமையை தற்போது மீட்டுள்ளோம்.முக்கியமான 50 சர்வதேச நிறுவனங்கள், தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. இன்னும் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன. திறன்மிகு மையங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழகம்தவிர்த்து இந்தியா, தெற்காசியாவில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தி என்பது இல்லை. குறிப்பாக, இந்த3 மையங்கள் மூலம் தமிழகம்வெகுவாக வளர்ந்துள்ளது. கிராமப்புற மாணவர்கள் நிறைய பேர் இங்கு வந்து பயிற்சிபெறுகின்றனர்.

தற்போது மாணவர்களுக்கான செயல்முறை வசதிகள் சென்னை,கோவையில் உள்ளன. விரைவில்டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையங்கள் அமைக்கப்படும். குறிப்பாக, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவிலில் இவை அமைக்கப்படும்.

அதிக அளவிலான முதலீடு: சென்னை, கோவை தவிர்த்து,மற்ற நகரங்களில் உள்ள திறன்பெற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற நிறுவனங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது, தென் தமிழகத்துக்கு அதிக அளவிலான முதலீடுகள் வர வாய்ப்புள்ளது.

டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ளதால், வேளாண் மதிப்புக் கூட்டப்பட்ட நிறுவனங்கள், மாசு ஏற்படுத்தாத நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது. ஓசூர் விமான நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் ஒத்துழைப்புடன், அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளோம். பரந்தூரைப் பொறுத்தவரை, அவர்களுக்கான புதிய கிராமங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x