Published : 08 Sep 2023 04:14 AM
Last Updated : 08 Sep 2023 04:14 AM

ஆளுநரின் தேடல் குழு அறிவிப்பை சட்டப்படி எதிர்கொள்வோம் - உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: பாரதியார், ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலை.களுக்கு புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவை ஆளுநர் தன்னிச்சையாக அமைத்துள்ள விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் கோவை பாரதியார், ஆசிரியர் கல்வியியல் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவிகள் காலியாகஉள்ளன. இதையடுத்து, புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடல் குழுவை ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக முடிவுசெய்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.

மேலும், வழக்கத்துக்கு மாறாகஇந்தக் குழுவில் 4-வது நபராகபல்கலை. மானியக் குழுவின் (யுஜிசி) உறுப்பினரும் சேர்க்கப்பட்டுள்ளது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவை ஆளுநர் ரவி தன்னிச்சையாக அமைத்துள்ள விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயர்கல்வித் துறையின் கீழ்13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக்கழகங்களுக்கென தனித்தனியே சட்டம் மற்றும் விதிமுறைகள் உள்ளன. அதன்படி, துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்தவுடன், அதைநிரப்ப தேடல் குழு அமைக்கப்படும். அந்தக் குழு பரிந்துரைக்கும் நபர்களில் இருந்து புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார்.

பல்கலை. சட்டவிதிகளின்படி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவை ஆளுநர்அமைக்க முடியாது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 10-ம் தேதியும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நவம்பர் 30-ம் தேதியும் முடிவடைந்தது. இதற்கான தேடல் குழு உறுப்பினர்கள் அந்தந்த பல்கலை. விதிகளின்படி நியமிக்கப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு அரசிதழில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஆளுநரும் தன்னிச்சையாக தேடல் குழுவை அமைத்ததில்லை.

இதுதவிர, தேடல் குழு விவரங்களை அரசுதான் அரசிதழில் வெளியிடும். ஆனால், ஆளுநர் தற்போது நடைமுறையில் உள்ள பல்கலை. சட்ட விதிகளுக்கு எதிராக தேடல்குழுவை தன்னிச்சையாக முடிவுசெய்து அறிவித்துள்ளார். இதுபல்கலை. சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானதாகும். அரசின்அலுவல் விதிகளின்படி, அரசிதழில்அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும், ஆனால், ஆளுநரின் தன்னிச்சையான அறிவிப்பு மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது.

தெலங்கானா மற்றும் குஜராத் மாநிலங்களைபோல, பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்யும் அதிகாரத்தை அரசுக்கு அளிக்க வழிசெய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் 2022-ம் ஆண்டு ஏப்ரலில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த மசோதாவுக்கு ஆளுநர்ஒப்புதல் வழங்கவில்லை. இந்த விவகாரத்தை தமிழக அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை. சட்டவிதிகளின்படி புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவை ஆளுநர் அமைக்க முடியாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x