சாயல்குடி அருகே பைக் - கார் நேருக்கு நேர் மோதல்: பள்ளி மாணவர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

சேதமடைந்த கார்.  (அடுத்த படம்) தீப்பற்றி உருக்குலைந்த பைக்.
சேதமடைந்த கார். (அடுத்த படம்) தீப்பற்றி உருக்குலைந்த பைக்.
Updated on
1 min read

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே பைக்- கார் நேருக்கு நேர் மோதியதில் மாணவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தினர் 3 பேர் படுகாயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள கடுகுச்சந்தை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இசேந்திரன் (17), அன்பரசு (20), லிங்கேஸ்வரன் (22) . இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு மேலச்செல்வனூர் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஊரிலிருந்து பைக்கில் புறப்பட்டனர்.

ராமநாதபுரம் அருகே புத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (45), தனது மகன் ஹரி பாலா (14), மனைவி சண்முக வள்ளியுடன் கேரளாவுக்கு காரில் புறப்பட்டார்.

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் சாத்தங்குடி விலக்கு பகுதியில் சென்றபோது பைக்- கார் நேருக்கு நேர் மோதின. இதில் இசேந்திரன், அன்பரசன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த லிங்கேஸ்வரன் ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கார் மீது மோதிய வேகத்தில் தீப்பற்றிய பைக் முற்றிலும் உருக்குலைந்தது. விபத்தில் உயிரிழந்த இசேந்திரன் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

காரில் பயணம் செய்து காயமடைந்த ஹரிபாலா, சண்முகவள்ளி ஆகியோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக் குறித்து கடலாடி போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in