

கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி காரணம்பேட்டையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் செயல்படும் 90 தொழில் அமைப்புகளை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
மின் கட்டண உயர்வால் தொழில்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த தொழில் அமைப்பினர் ஒன்றிணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காரணம்பேட்டையில் நேற்று கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடந்தது.
இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால், முத்து ரத்தினம், சுருளி வேல், ஸ்ரீகாந்த், கோவிந்த ராஜ். கோபி பழனியப்பன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, குறிப்பாக 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலை கட்டணம், காலை 6 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகளை இயக்கினால் 15 சதவீதம் கூடுதல் மின் கட்டணம் ஆகியவற்றால் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
அரசின் கவனத்தை ஈர்க்க நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் செயல்படும் 90 தொழில் அமைப்புகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அடுத்த கட்டமாக செப்டம்பர் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல், ஸ்பீட் போஸ்ட், கொரியர் மூலம் மனு அனுப்பவும், 25-ம் தேதி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் ஒரு நாள் தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு செய்து, கருப்புக் கொடி ஏற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, எம்எஸ்எம்இ தொழில் துறையினரின் நியாயமான கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட நிலை கட்டணம், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுகவை சேர்ந்த பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் ஆனந்தன், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்று தொழில் முனைவோருக்கு ஆதரவு தெரிவித்து பேசும் போது, ‘‘திமுக ஆட்சியில் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்பட்டது இல்லை. தொழில்முனைவோருக்காக அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்’’ என்றனர்.