Published : 08 Sep 2023 07:00 AM
Last Updated : 08 Sep 2023 07:00 AM
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள பாலகங்களில் ஆவின் நெய், வெண்ணெய் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 30 லட்சம் வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்படுகிறது. கொழுப்புச் சத்து அடிப்படையில் பால் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற உறைகளில் (பாக்கெட்டுகளில்) அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர் உட்பட 200 வகையான பால் பொருட்கள், 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள ஆவின் பாலகங்களில் கடந்த ஒரு வாரமாக ஆவின் வெண்ணெய், நெய்கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். குறிப்பாக,ஆவின் பாலகங்களில் 200 கிராம், 500 கிராம் நெய் பாட்டில்களும், 100 கிராம், 500 கிராம் வெண்ணெய் பாக்கெட்களும் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆர்டர் செய்வது கிடைப்பதில்லை: ஆவின் பாலகங்களுக்குத் தேவையான பொருள்கள் செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்யப்படுகின்றன. முதல்நாள் மாலை 6 மணிக்கு முன்பதிவு செய்தால், மறுநாள் மாலைக்குள் அந்தப் பொருட்கள் ஆவினில் இருந்து வந்துசேருவது வழக்கம்.
பாலகங்களை நடத்துபவர்கள், 100 கிராம், 500 கிராம் வெண்ணெய் பாக்கெட்டுகள், 100 கிராம்,200 கிராம், 500 கிராம் நெய் பாட்டில்களை முன்பதிவு செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கு அவற்றை அனுப்பாமல், வேறுபொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், ஆவின் பாலகங்களில் நெய், வெண்ணெய் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆவின் பாலகங்கள் நடத்தும் சிலர் கூறியதாவது: ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறைந்ததால், பாலில் இருந்து கிரீம் எடுத்து வெண்ணெய் தயாரிப்பது குறைந்துள்ளது. வெண்ணெய் குறைந்ததால், நெய் உற்பத்தியும் சரிந்துள்ளது. இதன் காரணமாக,ஆவின் பாலகங்களுக்கு வெண்ணெய், நெய் கிடைப்பது இல்லை.
விலை குறைவு: ஆவின் நெய் ஒரு லிட்டர்ரூ.680-க்கு விற்கப்படுகிறது. தனியார் நிறுவன நெய் ஒருலிட்டர் ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆவின் நெய்யை அதிகம் விரும்புகின்றனர். தற்போது,நெய், வெண்ணெய் கிடைக்காததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்துச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ஆவின் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``ஆவின் பாலகங்களுக்கு 200 கிராம், 500 கிராம், ஒரு லிட்டர் நெய் பாட்டில்களும், 100 கிராம்,500 கிராம் வெண்ணெய் பாக்கெட்களும் படிப்படியாக அளித்து வருகிறோம்.
சென்னையில் உள்ள ஆவின் பாலகங்களில் ஓரிரு நாட்களில் ஆவின் நெய், வெண்ணெய் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT