Published : 08 Sep 2023 06:20 AM
Last Updated : 08 Sep 2023 06:20 AM
சென்னை: சென்னையில் ரூ.5 ஆயிரத்து 45 கோடியில் குப்பை எரிப்பதற்கான உலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கோரிக்கை மனு அளித்துள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் செப்.7-ம் தேதி‘உலக தூய காற்று நாள்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி, சென்னைமாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனை ரிப்பன் மாளிகையில் நேற்று சந்தித்தார். அப்போது சென்னைமாநகராட்சி பகுதியில் காற்று மாசைக்குறைக்கவும், காற்று மாசு அதிகரிக்கும்திட்டங்களைக் கைவிடவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது: சென்னை மாநகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை எரிப்பதற்கான உலை அமைக்க ரூ.5ஆயிரத்து 45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் பாதரசம், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டநச்சு வாயுக்கள் காற்றில் பரவி சுகாதாரச் சீர்கேடு ஏற்படும். எனவேகுப்பையை எரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். ரூ.5 ஆயிரம் கோடியில் குப்பையை பிரித்து மேலாண்மைசெய்தாலே குப்பை இல்லாத நகரமாக சென்னையை மாற்றலாம்.
சென்னையில் காற்று மாசைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள்இணைந்து செயல் திட்டம் உருவாக்கியுள்ளன. இதன்படி, சென்னையில் 5 ஆண்டுகளில் 40 சதவீதம் காற்று மாசைக் குறைக்க ரூ.181 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செயல்திட்டம் உருவாக்கி 3 ஆண்டுகள் ஆகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவரவேண்டிய காசு மாசு குறித்த அறிக்கைகூட இன்னும் வெளிவரவில்லை.
பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்றஎரிசக்திகள் மூலம் இயங்கும் மோட்டார் வாகனம் அல்லாத போக்குவரத்து முறையை சரியாக செயல்படுத்த வேண்டும். இந்த அம்சங்கள் இடம்பெற்ற கோரிக்கை மனுவை ஆணையரிடம் வழங்கினோம் என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT