Published : 08 Sep 2023 06:14 AM
Last Updated : 08 Sep 2023 06:14 AM

சென்னை அருகே விசைப்படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்கள் மீட்பு: கடலோர காவல்படை மீட்டது

சென்னை: சென்னை அருகே படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். இது தொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் (பாதுகாப்பு பிரிவு) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையைச் சேர்ந்த கணபதி பெருமாள் என்ற மீனவர், மேலும் சிலருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆக.24-ம் தேதி விசைப்படகில் ஆழ்கடலுக்கு சென்றார். அவரது படகில் உள்ள இயந்திரங்கள் கடந்த செப்.1-ம் தேதி பழுதானது. அப்போது அந்த படகு சென்னையில் இருந்து 384 கி.மீ. தொலைவில் இருந்தது.

படகு பழுதாகி நடுக்கடலில் இருப்பது கடலோர காவல்படை மற்றும் அதன் வான் கண்காணிப்புப் பிரிவு மூலம் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடலோர காவல்படை கப்பல் வரும் வரை, அந்த விசைப்படகு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

ஆயுஷ் கப்பல்: இந்நிலையில், கடலோர காவல் படையின் ஆயுஷ் கப்பல், கடந்த 6-ம் தேதி அதிகாலை பழுதடைந்த விசைப்படகு நின்றிருந்த இடத்துக்கு சென்றடைந்தது.

படகை இயங்குவதற்கான உதவிகளும் படகில் இருந்தவர்களுக்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, விசைப்படகு விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு, படகும் அதில் இருந்த 9 மீனவர்களும் ஆந்திர மாநில மீன்வளத் துறையிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x