Published : 25 Dec 2017 09:49 AM
Last Updated : 25 Dec 2017 09:49 AM

தேர்தல் முடிவால் வெறிச்சோடிய அதிமுக, திமுக அலுவலகங்கள்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்ததால், சென்னையில் உள்ள அதிமுக, திமுக அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. சுற்று வாரியாக முடிவு அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அனைத்து சுற்றுகளிலும் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி. தினகரன் முன்னிலையில் இருந்தார்.

அதிமுக அலுவலகம்

இதனால் அதிமுக அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் அதிர்ச்சி அடையத் தொடங்கினர். சிறிது நேரத்தில் அங்கிருந்து தொண்டர்கள் வெளியே செல்லத் தொடங்கினர்.

பாதுகாப்புக்கு இருந்த போலீஸாரும் கலைந்து சென்றனர். பகல் 10.30 மணி அளவில் அதிமுக அலுவலகம் வெறிச்சோடியது.

அண்ணா அறிவாலயம்

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், தொடர்ந்து டிடிவி. தினகரன் முன்னிலையில் இருந்து வந்தார். அதனால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்த தொண்டர்கள் கவலை அடைந்தனர்.

தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 2-வது இடத்துக்காவது வந்து விடுவார் என்று நினைத்திருந்த நிலையில், அவர் 3-வது இடத்துக்குச் சென்றதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேரத்தில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து தொண்டர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். சிறிது நேரத்தில் அண்ணா அறிவாலயம் வெறிச் சோடியது.

‘டிடிவி தினகரன் பிரிந்து தனியாக நிற்பதால், அதிமுக ஓட்டுகள் பிரியும்; அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துவிடலாம்’ என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் இருந்த நிலையில், டெபாசிட்கூட வாங்காமல் திமுக தோல்வியைத் தழுவியது, கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x