Published : 08 Sep 2023 06:29 AM
Last Updated : 08 Sep 2023 06:29 AM
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், மத்திய அரசு நிறுவனங்கள் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய அரசு நிறுவனங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் மாவட்டச் செயலர் சி.சங்கர் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் சிஐடியூ மாவட்டச் செயலர் முத்துக்குமார் தலைமையிலும், உத்திரமேரூரில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் கே.நேரு தலைமையிலும், படப்பையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த 4 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு இந்தியன் வங்கி எதிரில் வட்ட செயலாளர் வேலன், மதுராந்தகத்தில் ராஜா, சித்தாமூரில் ரவி, திருக்கழுகுன்றத்தில் குமார், திருப்போரூரில் செல்வம், சிங்கப்பெருமாள் கோவிலில் ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில், மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். மேலும், அக்கட்சியினர் முக்கிய நிர்வாகிகள் மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
இதில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதிஅண்ணா, மாநில குழு உறுப்பினர் ஜான்சிராணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், இ.சங்கர், புருஷோத்தமன், வாசுதேவன், சேஷாத்ரி, தமிழரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 336 பெண்கள் உட்பட 872 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் திருமண மண்டபங்களில் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர்.
அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம், திருமுல்லைவாயில், திருநின்றவூர் ஆகிய 10 இடங்களில், மத்திய அரசு நிறுவனங்களான தபால் நிலையம், அரசு வங்கிகள், பிஎஸ்என்எல் அலுவலகங்கள் ஆகியவை முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர்களான சுந்தரராஜன், நம்புராஜன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோபால், சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துளசிநாராயணன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.மகேந்திரன், வடசென்னை மாவட்ட குழு உறுப்பினர் பூபாலன், ஆவடி தொகுதி செயலாளர் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 900-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபங்களில் வைத்திருந்து, மாலையில் விடுவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT