

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கிரிநகரில் கழிவுநீர் தொட்டியை தூய்மை செய்யும்போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கிரிநகரில் படை, உடை தொழிற்சாலை ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தின் ஒரு பிரிவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே 12 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் நேற்று மதியம் தூய்மைப் பணி நடைபெற்றது. ஒப்பந்த பணியாளர்களான பட்டாபிராம் - பீமராவ் நகரை சேர்ந்த மோசஸ் (39), ஆவடி பஜார் பகுதியைச் சேர்ந்த தேவன் (50) தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் மோசஸ் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதனால் தொட்டியின் மேல்பகுதியில் நின்ற தேவன், மோசஸை காப்பாற்ற, கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார். அப்போது, தேவனும் விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த படை உடை தொழிற்சாலை, கனரக வாகன தொழிற்சாலை மற்றும் ஆவடி தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, மோசஸ், தேவன் இருவரையும் மீட்டு, ஆவடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மோசஸ், தேவன் ஆகிய இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் தாங்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேற்பார்வையாளர் ஆகிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கிரிநகர் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கி மோசஸ், தேவன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.