Published : 08 Sep 2023 06:05 AM
Last Updated : 08 Sep 2023 06:05 AM

கட்டணமில்லா பயண அட்டையை இணையவழியில் பெறும் திட்டம்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

சென்னை: மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பேருந்துகளின் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படுகிறது.

இந்த பயண அட்டைகளை இணையவழியில் வழங்கும் நடைமுறை தொடங்கப்படும் என்றுசட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், பல்லவன் போக்குவரத்துஅறிவுரைப் பணிக்குழு மற்றும்தமிழ்நாடு மின் ஆளுமை முகமை நிறுவனத்துடன் இணைந்து, இணையதளம் வாயிலாக கட்டணமில்லா பயண அட்டையை பெற்றுக்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல்கட்டமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வழங்கப்படும் பயண அட்டைகளை இணையவழியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசதியை சென்னை தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கிவைத்தார்.

இதன்மூலம், வீட்டின் அருகில்உள்ள இ-சேவை மையத்தில் அல்லது tn.e.sevai என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, அதற்குரிய ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதற்கான உரிய குறுஞ்செய்தி பெறப்பட்ட பின்னர், பயணஅட்டையை ஏ4 தாள் அல்லது பிளாஸ்டிக் அட்டையில் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x