2 வழித்தடங்கள் நீட்டிப்பு குறித்த சாத்தியக்கூறு அறிக்கை இரு வாரங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல்

சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடந்து வரும் மெட்ரோ பணிகள் | படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நடந்து வரும் மெட்ரோ பணிகள் | படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பில் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புறநகர் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2-ம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் பால் பண்ணை-சிறுசேரி வரையிலான 3-வது வழித்தடத்தை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கவும், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இதுதவிர, மாதவரத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் வாயிலாக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், சிறுசேரி –கிளாம்பாக்கம், கோயம்பேடு –ஆவடி மெட்ரோவுக்கான சாத்தியக்கூறு அறிக்கை அடுத்த 2 வாரங்களில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோரயில் அதிகாரிகள் கூறியதாவது: சிறுசேரி – கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி மெட்ரோவுக்கான சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகள் முடிந்துள்ளதால், அடுத்த 2 வாரங்களில் அரசிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

வழித்தடங்கள், போக்குவரத்து நெரிசல், செலவுகள் உள்ளிட்ட முழு விவரங்கள் இதில் இடம்பெறும். 3 வழித்தடங்களில் ஆவடி – கோயம்பேடு மெட்ரோவுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கிறது. பூந்தமல்லி – பரந்தூர் இடையே நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலப் பணிகள் நடக்க உள்ளன. இதனால், இந்த தடத்தில் மெட்ரோ சாத்தியக்கூறு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளன. சாத்தியக்கூறுகளுக்கு அரசு ஒப்புதல் அளித்த பிறகே, அடுத்த கட்டமாக, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, இந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in