

சென்னை: நில அபகரிப்பு என்பது அப்பட்டமான பகல் கொள்ளை. அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, சுய நலனுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறினார்.
சென்னை தி.நகரில் கிரிஜா என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்த திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம், வாடகையும் கொடுக்காமல், வீட்டையும் காலி செய்யாமல் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பு செய்து வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 48 மணி நேரத்தில் அவரை அந்த வீட்டில் இருந்து காலி செய்து, வீட்டை உரிமையாளரான கிரிஜாவிடம் ஒப்படைக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு, அந்த அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி, அந்த வீட்டில் இருந்து திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை காலி செய்த காவல் துறை அதிகாரிகள், வீட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
வாடகை பாக்கி: இந்நிலையில், இந்த வழக்குமீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர காவல் ஆணையர் தரப்பில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கிரிஜா தரப்பில், ராமலிங்கம் இன்னும் வாடகை பாக்கியைத் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, "அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தையும், செயல்களும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே, மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நல்வழியில் நடக்க வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது செல்வாக்கின் மூலமாக மக்களை மிரட்டுவதையும், அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுத்துவதையும் இந்தநீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது.
அரசியல்வாதிகள் தங்களது அரசியல் அதிகாரத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலனுக்காக பிரச்சினைகளை உருவாக்க பயன்படுத்தக் கூடாது. நில அபகரிப்பு என்பது அப்பட்டமான பகல் கொள்ளை" என்று தெரிவித்தார்.
மேலும், ராமலிங்கத்திடமிருந்து வாடகையை வசூலிப்பது தொடர்பாக, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.