Published : 18 Dec 2017 08:03 AM
Last Updated : 18 Dec 2017 08:03 AM

ஆர்.கே.நகரில் அதிகரித்து வரும் பணப் பட்டுவாடா புகார்கள்: தேர்தல் அதிகாரி ஆலோசனை - அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார்

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆர்.கே.நகர் தொகுதி சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்தினார்.

இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப் பட்டுவாடா நடப்பதாக திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. கடந்த 3 நாட்களாக பணப் பட்டுவாடா, மறியல், போராட்டங்களால் ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால், அங்கு மீண்டும் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா கூறும்போது, ‘‘ஆர்.கே.நகரில் சூழலைப் பொறுத்து தேர்தலை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், வட சென்னை எம்பி, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, திமுக சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப் பிரிவு செயலாளர் கிரிராஜன், டிடிவி தினகரன் சார்பில் பி.வெற்றிவேல், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை கோட்டப் பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் பி.டி.அரசக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், பாரதிதாசன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஒவ்வொரு கட்சியினருடனும் தனித் தனியாக விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் புகார் அளித்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த புகார் மனுவில், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவினர் ரூ.100 கோடிக்கு மேல் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும்போது திமுகவினர் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணப் பட்டுவாடாவைத் தடுக்க காவல் துறையும், தேர்தல் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளும் தவறிவிட்டனர். எனவே, அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு எங்கள் மீது வீண்பழி சுமத்தி வருகின்றனர். தோல்வி பயம் காரணமாக எதிர்க்கட்சிகள்தான் பணப் பட்டுவாடா செய்து வருகின்றன. அதோடு, தேர்தல் ரத்து செய்யப்பட்டு விடும் என்ற பொய்யான தகவலையும் பரப்பி வருகின்றனர்’ என கூறப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் கோடிக்கணக்கில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். எனவே, அதிமுக வேட்பாளர் மதுசூதனனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர். ‘ஆர்.கே.நகரில் சர்வசாதாரணமாக பணப் பட்டுவாடா நடக்கிறது. காவல்துறையினரும், அதிகாரிகளும் அதை கண்டுகொள்வதே இல்லை. எனவே, முறையாக தேர்தல் நடத்த முடிந்தால் நடத்த வேண்டும். இல்லையெனில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஆலோசனைக்கு பிறகு கருத்து தெரிவித்த விக்ரம் பத்ரா, ‘‘அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அளித்த புகார்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும். தேர்தல் முறையாக நடக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்தினார். ரூ.100 கோடி அளவுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அனைத்துக் கட்சிகளும் புகார் தெரிவித்துள்ளதால் இரண்டாவது முறையாக ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x