

சென்னை நகரின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வலியுறுத்தி பசுமை சென்னை அமைப்பு சார்பில் ஒஎம்ஆரில் நேற்று விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கனரா வங்கியின் தலைவர் மனோகரன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தாமஸ் ஃபிராங்கோ, பசுமை சென்னை அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பர் ராஜ் உள்ளிட்டோர் இந்த மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் போட்டியில் கனரா வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, ரோட்டரி சங்கங்கள் உட்பட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
போட்டியின் தொடக்கத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், அடுத்த 10 ஆண்டுகளில் சென்னையின் பசுமைப் பரப்பை 33 சதவீதத்துக்கும் அதிகமாக மாற்றுவது என உறுதிமொழி எடுக்கப்பட்டது. பொதுத் துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தியும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. போட்டியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன