Published : 04 Dec 2017 08:46 AM
Last Updated : 04 Dec 2017 08:46 AM

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையில் மெகா கூட்டணி

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைமையில் தற்போது மெகா கூட்டணி அமையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

கடந்த 1999 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிட்டது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும் அங்கம் வகித்தது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய திமுக, 2004 மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்தது. காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்த இந்தக் கூட்டணி புதுச்சேரி உட்பட 40 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஆனால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி உடன்பாட்டில் சிக்கல் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அதன்பிறகு நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் திமுக எதிர்ப்பு நிலை எடுத்த மதிமுக, 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக வைகோ அறிவித்துள்ளார்.

மெகா கூட்டணி

அதுபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் 11 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக பக்கம் வந்துள்ளன. இந்த கட்சிகளும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்மூலம் 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதாவது 13 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மெகா கூட்டணியை திமுக உருவாக்க வாய்ப்புள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் இணைந்த மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக, தமாகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி களம் இறங்கிய இந்தக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது.

ஆனால், இந்தக் கூட்டணிதான் அதிமுகவுக்கு எதிரான கட்சிகள் திமுகவுடன் இணைவதை தடுத்து 2-வது முறையாக அதிமுக அரசு அமைய வழிவகுத்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு காரணமான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

மாறிய அரசியல் சூழல்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை மாறத் தொடங்கியது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டு சசிகலா, டிடிவி தினகரன் ஓரங்கட்டப்பட்டனர். பாஜகவுக்கு இணக்கமாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகின்றனர். பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக அரசு இருப்பதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் அதிமுக, பாஜகவுக்கு எதிரான கட்சிகள் திமுக தலைமையில் அணி திரண்டு வருகின்றன.

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் அமைந்த மெகா கூட்டணி 100 சதவீத வெற்றியை பெற்றது. மத்தியில் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைய இது முக்கிய காரணமாக அமைந்தது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் பங்களிப்பு இருந்தது. எனவே, திமுக தலைமையில் மீண்டும் மெகா கூட்டணி அமைவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x