Last Updated : 05 Dec, 2017 12:17 PM

 

Published : 05 Dec 2017 12:17 PM
Last Updated : 05 Dec 2017 12:17 PM

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி: அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதனால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5-ம் அன்று அன்று மரணமடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அதிமுகவினர் மற்றும் தினகரன் அணியினரால் அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு இன்று காலையில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக அதிமுக தொண்டர்கள் புறப்பட்டுச் சென்றனர். அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புச்சட்டை அணிந்து நடந்து சென்றனர். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை முதலே முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள அதிமுகவினர் வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர்.

அனைத்து வாகனங்களும் அண்ணாசாலை அண்ணா சிலை நோக்கி வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 8.30 மணி முதலே அண்ணா சாலையில் வாகனங்கள் அணிவகுத்ததால் காலையில் பள்ளிக்கு, வேலைக்குச் செல்வோர் கடும் சிரமத்தை அனுபவித்தனர்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் பாதை மாறி திருப்பி விடப்பட்டதால் வேலைக்குச் செல்வோர் பேருந்து இன்றி தவித்தனர். காலை முதலே அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, பாரிமுனை, சென்ட்ரலிலிருந்து வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

அண்ணாசாலை நோக்கி வந்த வாகனங்கள் இரண்டு மூன்று கிலோ மீட்டருக்கு முன்பே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பல கிலோ மீட்டர் நடந்து தங்கள் பணியிடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

அண்ணாசாலையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகளால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, அண்ணா சாலையை ஒட்டியே அமைதி ஊர்வலமும் நடந்ததால் அண்ணாசாலை, காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அண்ணாசாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் தொடர்ச்சி பல கிலோ மீட்டர் நீளத்திற்கு ஜெமினி மேம்பாலம் வரை நீடித்தது. மறுபுறம் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்ட்ரல், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி என பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அரசு சார்பில் நடந்த அமைதி ஊர்வலத்திற்குப் பின்னர், தினகரன் அணி சார்பில் அண்ணா சாலையிலிருந்து 12 மணிக்கு அமைதி ஊர்வலம் என்பதால் தொடர்ச்சியாக நான்கு மணி நேரத்திற்கும் மேலாக அண்ணா சாலையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x