Published : 07 Sep 2023 05:13 PM
Last Updated : 07 Sep 2023 05:13 PM

இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுமா?

கோவை: தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கியநகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுக்குதினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை ரயில்நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம்,சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் பீளமேடு,சிங்காநல்லூர், இருகூர் ரயில் நிலையங்களை கடந்து செல்கின்றன.

இந்த மூன்று ரயில் நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்தி, தரம்உயர்த்த வேண்டும் என தெற்கு ரயில்வேக்கும், சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்துக்கும் ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெற்கு ரயில்வே மண்டல ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறியதாவது: கோவையில் இருந்தும், கோவை வழியாகவும் சென்னைக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர்ரயில் நிலையங்களை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த மூன்று ரயில் நிலையங்களுக்கும் முன்பு அதிகளவில் பயணிகள் வந்து சென்றனர். கரோனாவுக்கு பின்னர் பயணிகள் வருகை குறைந்து விட்டது. பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அதிக ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்றால் அதற்கு இம்மூன்று ரயில் நிலையங்களையும் தரம் உயர்த்துவது அவசியமாகும்.தரம் உயர்த்தும் போது, பிளாட்பாரம் நீளம்அதிகரிப்பு, அடிப்படை கட்டமைப்புகள்ஏற்படுத்துதல் போன்ற அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்படும்.

மங்களூர் - சென்னை எழும்பூர் ரயில், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில், கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கோவை- மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், கோவை - ஈரோடு மெமு ரயில் ஆகியவை பீளமேட்டில் நின்று செல்கின்றன. 24 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு பீளமேடு ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்களை நீளப்படுத்த வேண்டும்.

புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தில் நீர் பயன்பாடு இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை. இந்த ரயில் நிலையத்துக்கு வரும் சாலைகளை சீரமைக்க வேண்டும். ரயில் பாதையை வாகனங்கள் கடந்து செல்ல மேம்பாலம் உள்ளது. அதேசமயம், மக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும்.

இருகூர் ரயில் நிலையம் முக்கிய சரக்கு ரயில்கள் வரும் மையமாக உள்ளது. இங்கும்பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இங்கு 2 பிளாட்பாரங்கள் உள்ளன. கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், கோவை - மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - திருச்சி ரயில், கோவை - ஈரோடு மெமு ரயில் ஆகியவை இங்கு நின்று செல்கின்றன.

மக்கள் வசதியாக ஏறி, இறங்கும் அளவுக்கு பிளாட்பாரம் இல்லை. ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளது. கோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாகத்தான் செல்கின்றன. இங்கு அனைத்து ரயில்களும் நிற்பதில்லை. வேலைக்கு செல்பவர்கள், சீசன் டிக்கெட் எடுப்பவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் கோவை -ஈரோடு மெமு , பாலக்காடு - திருச்சி பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்கின்றன. கரோனாவுக்கு பின்னர் சேவை குறைந்ததால் பயணிகள் வருகை குறைந்து விட்டது. இந்த மூன்று ரயில்நிலையங்களிலும் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வகையில் பிளாட்பாரம் நீளம் அதிகரிப்பு,அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். அதேபோல, வாகனம் நிறுத்தும் இடத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். சேலம் ரயில்வே கோட்டம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும் போது, ‘‘இக்க கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆங்கிலேயர்களின் காலத்தில் 12 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது 24 பெட்டிகள் உள்ளதால், அதற்கேற்ப பிளாட்பா ரங்களின் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும்.

வடகோவை ரயில் நிலையத்தை தற்போது மேம்படுத்தி வருவதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர். இம்மூன்று ரயில் நிலையங்களை பொருத்த வரை நாங்கள் படிப்படியாக மேம்படுத்துவோம் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x