

சென்னை: மேடு பள்ளத்துடனும் புழுதி பறக்கும் நிலையில் கழிவுநீர் தேக்கம், குப்பை தொட்டிகள் ஆக்கிரமிப்பு என வாகன ஓட்டிகளை மூச்சு திணற வைக்கிறது சென்னை காவல் ஆணையர் அலுவலகம் பின்புறம் உள்ள ஜோதி வெங்கடாசலம் சாலை. இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் 8 தளங்கள் கொண்டது.
இது சென்னை காவல் துறையின் தலைமை அலுவலகமாகவும் உள்ளது. இங்கு மோசடி தடுப்பு பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், போலீஸ் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர். இதேபோல் இங்கு திங்கள் முதல் வெள்ளிவரை அரசு விடுமுறை தினங்கள் தவிர தினமும் புகார் மனுக்களும் பெறப்படுகின்றன.
இவ்வாறு புகார் அளிக்கவரும் மக்கள் மனுவை அளித்துவிட்டு வெளியேறும் வகையில் அலுவலகத்தின் பின்புறம் ஜோதி வெங்கடாச்சலம் சாலையில் தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வேப்பேரியையும், பூந்தமல்லி நெடுஞ்சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். வேப்பேரி இ.வி.கே சம்பத் சாலையில் நெரிசல் இருந்தால் இந்த ஜோதி வெங்கடா சலம் சாலை வழியாக பூந்தமல்லி சாலையை அடையலாம்.
இந்த சாலையில்தான் மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அலுவலகம், மாணவ, மாணவியர் விடுதி, அடுக்குமாடி குடியிருப்பு, தனியார் நிறுவனங்கள் என ஏராளமானவை உள்ளன. இத்தனை பேர் பயன்படுத்தும் இந்த முக்கிய சாலை சாலையோ சிதிலமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. மேடு பள்ளங்கள், சாலையை ஆக்கிரமித்து குப்பை தொட்டிகள், வழிந்தோடும் சாக்கடை நீர், சாலை நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக கழிவுநீர் கால்வாய் மூடி என அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து சுரேஷ் என்பவர் கூறும்போது, ‘இந்த சாலை தற்போது மிக மோசமாக உள்ளது. மழை நேரங்களில் பெண்கள் வாகனங்களில் செல்வது மிக சிரமம். வெயில் காலங்களில் புழுதி பறக்கும். இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படு கின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும்’ என்றார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத போலீஸார் கூறும்போது, ‘‘காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தினமும் பணிக்கு வரும் நிலையில் வாகனங்களை இந்த சாலையோரம் நிறுத்துகிறோம். புழுதி மண்டலத்துக்கு நடுவே சிக்கி வாகனங்கள் பாழாகின்றன. எனவே, இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்’ என்றனர்.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இந்த பகுதியில் சாலை அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. இந்த வாரத்தில் புது சாலை அமைக்கும் பணியை தொடங்கி விடுவோம்’ என்றனர்.