Published : 07 Sep 2023 05:14 AM
Last Updated : 07 Sep 2023 05:14 AM
சென்னை: சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் தொடர்பாக தெரிவித்த கருத்து, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி மீது உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுப்ரமணியன் சுவாமி இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வெறுப்பு பேச்சு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சனாதன தர்மம் மீது வெறுப்பை தூண்டும் வகையிலும் உள்ளது.
அவரது இந்த பேச்சு இந்திய தண்டனை சட்டத்தின் 153-ஏ, 153-பி, 295-ஏ, 298, 505ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். சனாதன தர்மத்துக்கு எதிரான அவரது கருத்து பல லட்சம் பேரை சென்றடைந்துள்ளது. அவர் சார்ந்துள்ள கட்சி தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், சனாதன தர்மத்தை பின்பற்றி வருபவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் அவரது பேச்சு உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளது.
பொது அமைதியை சீர்குலைக்கும் பேச்சு: சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தொடர்ந்து களங்கப்படுத்துவது, அவர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பது என்பது பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது. எனவே, அமைச்சர் என்ற முறையில் உதயநிதிக்கு எதிராக குற்றவியல் ரீதியாக வழக்கு தொடர குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 196-ன்கீழ் ஆளுநர் உரிய அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த கடிதத்தை சுப்பிரமணியன் சுவாமி தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT