Published : 07 Sep 2023 05:04 AM
Last Updated : 07 Sep 2023 05:04 AM

தமிழகம் முழுவதும் கோயில்கள், இல்லங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, வேலூர் வேலப்பாடி பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து வந்திருந்த சிறுவர், சிறுமியர்கள். படம் : வி.எம்.மணிநாதன்.

சென்னை: தமிழகம் முழுவதும் கோயில்கள், இல்லங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தநாள், கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள பிருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள ‘இஸ்கான்’ கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காலை 8.30 மணி முதல் மதியம்2 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் ஸ்ரீராதாகிருஷ்ண தரிசனம், ஆரத்தி நடைபெற்றது.

சிறப்பு வழிபாடுகள்: தொடர்ந்து 24 மணி நேரமும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இங்கு கிருஷ்ணர் ஊஞ்சலில் ஆடும் காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. இதேபோல, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கிருஷ்ணர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவதுபோல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்தும் வழிபட்டனர்.

கிருஷ்ணர், ராதை போல தங்கள் குழந்தைகளுக்கு வேடமிட்டும் மகிழ்ந்தனர். பல்வேறு கோயில்கள், வீடுகளில் இன்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x