Published : 07 Sep 2023 06:52 AM
Last Updated : 07 Sep 2023 06:52 AM

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் எவ்வித மேம்பாட்டு வசதிகளும் செய்யப்படாது என அரசு உறுதி

மதுரை: அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் எவ்வித மேம்பாட்டு வசதிகளும் செய்யப்படாது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த அருண் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேதாஜி நகர் என்ற பெயரில் வீட்டு மனைகள் விற்கப்படுகின்றன. இந்த வீட்டுமனைகள் தமிழ்நாடு சட்டவிதிகளின் அடிப்படையில் வரன்முறை செய்யப்படவில்லை.

இவ்வாறு வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் அரசின் செலவில் சாலைகள் மற்றும் மேம்பாட்டு வசதிகளை செய்யக் கூடாது என தமிழக அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள். ஊராட்சித் தலைவர் ஆகியோர் இணைந்து, தனியார் சொத்துகளை மேம்படுத்தும் வகையில் சாலை அமைத்து வருகின்றனர்.

எனவே, அரசாணைக்கு எதிராகச் செயல்படும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல, தமிழகம் முழுவதும் வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் எந்த மேம்பாட்டு வசதியும் செய்யக் கூடாது என்ற அரசின் உத்தரவை முறையாக செயல்படுத்த உத்தரவிடக் கோரி பலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி கங்கா புர்வாலா அமர்வு விசாரித்தது. அரசு பிளீடர் திலக்குமார் வாதிடும்போது, “வரன்முறைப்படுத்தப்படாத மனைப் பிரிவுகளில் சாலை உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற மனைப் பிரிவுகளில் அரசின் நிதி செலவிடப்படாது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, “அரசின் விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. அரசு ஒரு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அதற்கான வழிமுறைகளையும் வகுக்கிறது. அதைமீறி சில அதிகாரிகள் தவறாகச் செயல்படுகின்றனர். இதை ஏற்க முடியாது. அந்த அதிகாரிகள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மனு முடித்து வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x