

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானம் 151 பயணிகளுடன் நேற்று அதிகாலை 5.05 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது. அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாகப் புறப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயணிகள் ஓய்வு அறைகளில் காத்திருந்தனர். சுமார்4 மணி நேரம் தாமதத்துக்குப் பின்னர், காலை 9.40 மணிக்கு விமானம் அந்தமானுக்குப் புறப்பட்டது. அந்தமானை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு மீண்டும் மோசமான வானிலை நிலவியதால், விமானம் அங்கு தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து, விமானம்பிற்பகல் 2 மணி அளவில் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. விமான ரத்து செய்யப்படுவதாகவும், இதே டிக்கெட்டில் நாளை (இன்று) அந்தமானுக்கு பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஹூப்ளி விமானத்தில் கோளாறு: அதேபோல, சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 58 பயணிகள் 6 விமான ஊழியர்களுடன் நேற்று காலை 10.30 மணிக்கு புறப்படத் தயாராக இருந்தது.
அப்போது, விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதைவிமானி கண்டுபிடித்தார். இதேநிலையில் விமானத்தை இயக்கினால் ஆபத்து ஏற்படுமெனபுரிந்து கொண்ட விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார்.
பொறியாளர்கள் வந்து இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பகல் 12 மணிவரை பழுது சரிசெய்யப்படாததால், மாற்று விமானம்மூலம் பயணிகள் அனைவரும் ஹூப்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.