

சென்னை: மாநகராட்சி சார்பில் அனுப்பப்படுவதாக வரும் போலி பணி நியமன ஆணைகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாக போலியான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுவதாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவின் கவனத்துக்கு வரப்பெற்றுள்ளது. இந்த போலி பணி நியமன ஆணைகள் தொடர்பாக உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியைப் பொறுத்தவரை பணி நியமனங்கள் அனைத்தும் வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ளப்படும். எனவே, இதுபோன்ற போலியான பணி நியமனங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.