Published : 07 Sep 2023 06:26 AM
Last Updated : 07 Sep 2023 06:26 AM
திருவள்ளூர்: பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால், சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை மணலி மாத்தூர் எம்எம்டிஏ பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு. இவர் கடந்த 2021-ம்ஆண்டு டிசம்பரில், கடை ஒன்றில் தனியார் பிஸ்கெட் நிறுவனம் ஒன்றின் 2 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அந்த பிஸ்கெட் பாக்கெட் கவரில், உள்ளே 16 பிஸ்கெட்டுகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், உள்ளே 15 மட்டுமே இருந்துள்ளன.
ரூ.29 லட்சம் மோசடி: இதுகுறித்து, டில்லிபாபு, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்காததால் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், ‘‘ஒருபிஸ்கெட் குறைப்பதன் மூலம்நாள் ஒன்றுக்கு, வாடிக்கையாளர் களிடம் இருந்து ரூ. 29 லட்சம் பிஸ்கெட் நிறுவனம் மோசடி செய்வதாக தெரிவித்திருந்தார். இதற்கு பிஸ்கெட் நிறுவனம் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தை ஏற்க மறுத்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், சமீபத்தில் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஒரு உணவுப் பொருள் பாக்கெட் செய்யப்பட்ட பின்பு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது அல்லது காற்று, மழை போன்ற இயற்கை காரணங்களால் 4.6 கிராம்எடை குறையலாம் என்று வணிக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுபோன்ற காரணங்களால் பிஸ்கெட் பாக்கெட் எடை குறைய வாய்ப்பில்லை.
கவரில் 16 பிஸ்கெட்டுகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 15 மட்டுமே இருந்துள்ளது. ஆகவே நேர்மையற்ற முறையில் விற்பனை செய்ததற்காகவும், சேவைகுறைபாட்டுக்காகவும் டில்லிபாபுக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT