Published : 07 Sep 2023 10:11 AM
Last Updated : 07 Sep 2023 10:11 AM

பட்டாசு விபத்தில் பலியான குடும்பங்களுக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 14 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த பட்டாசு விபத்தில் பலியான 32 பேரின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு சோளிங்கர் சாலையில் கடந்த 2009-ம் ஆண்டு அக்.16 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆனந்தகுமார் என்பவர் நடத்திய பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கியது. உயிரிழந்தவர்களில் 27 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஆந்திர அரசும் 27 பேரது குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கியது.

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி இறந்த 32 பேரது குடும்பத்தினர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, ‘‘உரிமம் இல்லாமல் பட்டாசுக்கடை நடத்திய ஆனந்தகுமாரும், அரசும் இதற்கு சரிசமமாக பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வயது மற்றும் வருமானத்தை கணக்கில் கொண்டு ரூ. 6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இழப்பீடு நிர்ணயித்து 32 பேரது குடும்பத்தாருக்கும் ரூ. 2.76 கோடி வழங்க உத்தரவிட்டார்.

இந்த தொகையில் 50 சதவீதத்தை ஆனந்தகுமார் வழங்க வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகளாகியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தனர்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த ஆணையத்தில் உரிய ஆவணங்களுடன் இழப்பீடு கோரி முறையிட வேண்டும் என்றும், அவற்றை பரிசீலித்து ஓய்வு பெற்ற நீதிபதி 6 மாதங்களில் தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும், என உத்தரவி்ட்டுள்ளனர்.

அதுவரை இடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், இந்த தொகையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை கழித்துக் கொண்டு எஞ்சிய தொகையை 12 வாரங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x