Published : 21 Dec 2017 11:18 AM
Last Updated : 21 Dec 2017 11:18 AM

சாகித்ய’ அகாடமி விருதுகள் இன்று அறிவிப்பு: தமிழ் விருதுக்கான போட்டியில் இன்குலாப்பின் ‘காந்தள் நாட்கள்’

இந்த ஆண்டுக்கான ‘சாகித்ய’ அகாடமி விருதுகள் புதுடெல்லியில் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து ‘சாகித்ய’ அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப் படுகின்றன. 2017-ம் ஆண்டுக்கான ‘சாகித்ய’ அகாடமி விருது பெறுவோர் பட்டியல் புதுடெல்லியில் இன்று பிற்பகல் அறிவிக்கப்படு கிறது.

தமிழ் நூலுக்குரிய இந்த ஆண்டுக்கான விருது யாருக்கு கிடைக்கும் என்பது பற்றி தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், வண்ணநிலவன், இமையம், கவிஞர் இன்குலாப், அம்பை, இரா.மீனாட்சி என விருது பெற வாய்ப்புள்ள பலரது பெயர்கள் பற்றி பரபரப்பாக பேசப்படுகின்றன.

இந்த விருதுக்கான போட்டியில் கவிஞர் இன்குலாப் எழுதிய ‘காந்தள் நாட்கள்’ கவிதை நூல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் - ‘அகரம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘காந்தள் நாட்கள்’ நூல் 2016-ல் வெளிவந்ததாகும். வாழ்நாள் முழுக்க சமூக அக்கறையுடன், ஒடுக்குமுறை களுக்கு எதிரான போராட்ட கவிதைகளை எழுதியவர் இன்குலாப். தொடக்கத்தில் திராவிட இயக்க சிந்தனை வழியில் பயணித்த இவர், கீழவெண்மணி படுகொலைக் குப் பிறகு மார்க்சியத்தை தனது கண்களாகக் கொண்டு இயங்கியவர். இளவேனில் நடத்திய ‘கார்க்கி’ இதழில்தான் இவரது ஆரம்ப கால கவிதைப் பேரணி தொடங்கியது. அதைத் தொடர்ந்து இவரது எழுத்துகள் இலக்கிய உலகத்தால் மட்டுமல்ல; போராட்டக்காரர்களுக்கும், தொழிற்சங்கத் தோழர்களுக்கும் உரம் சேர்க்கும் படைப்புகளாயின.

மனுசங்கடாநாங்க மனுசங்கடா

உன்னப் போல

அவனப் போல

எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா’

என்கிற இன்குலாப்பின் கவிதை பல மேடைகளில் உயிர்ப்பாக தோழர்களால் பாடப்பட்டுள்ளது. மறைந்த கே.ஏ.குணசேகரன் கணீர்க் குரலெடுத்து இந்தப் பாடலைப் பாடுகிறபோது இன்குலாப்பின் எழுத்துக்குள் இருக்கும் அரசியல் சூடு கூடுதல் அர்த்தம் பெறும்.

இன்குலாப் எழுதிய ‘அவ்வை’ நாடகம் பெண் முன்னேற்ற மேடைகளில் அதிக கவனம் பெற்ற பெருங் கலையாகும்.

wrapper

‘சமயம் கடந்து மானுடம் கூடும்

சுவரில்லாத சமவெளிதோறும்

குறிகளில்லாத முகங்களில்

விழிப்பேன்

மனிதம் என்றொரு

பாடலை இசைப்பேன்’

- என்றெழுதி செல்லும் இன்குலாப்பின் ‘காந்தள் நாட்கள்’ தொகுப்பில் இருந்து இதோ ஒரு கவிதை :

‘புதுத் தளிர்களால்

கொண்டாடக் காத்திருக்கிறது தரு

ஒரு பாடலுடன் வரவிருக்கிறது குயில்.

உடன் தளிர்த்து விழும் சருகுகளைத் தொடர்ந்து

ஒரு பழுப்புடை தரித்து

என் பயணமும்.

இலையுதிர்க் காலம்

எனினும் சருகாவதில்லை வேர்கள்!’

அடங்காத தமிழ் பற்றும், விடுதலைப் பற்றும் கொண்ட இன்குலாப்பின் ‘காந்தள் நாட்கள்’ சாகித்ய விருது பெறுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x