Published : 06 Sep 2023 04:56 PM
Last Updated : 06 Sep 2023 04:56 PM
விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள தீர்க்க முடியாத முக்கிய 10 கோரிக்கைகளை அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் பட்டியலிட்டு, மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்க வேண்டுமென கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார்.
அதன்படி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியின் முக்கிய பிரச்சினைகள் அடங்கிய மனுவை லட்சுமணன் எம்எல்ஏ அப்போதைய ஆட்சியர் மோகனிடம் வழங்கினார். மனு அளித்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், மனுக்கள் மீதான நடவடிக்கை எந்த அளவுக்கு உள்ளது என விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணனிடம் கேட்டபோது அவர் கூறியது:
விழுப்புரம் நகரில் அமைந்துள்ள வி.மருதூர் ஏரியின் நீர், குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஏரியின் மதகுகளை சரி செய்ய வேண்டும்; வரத்து வாய்க்கால்களை தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும்; ஏரியைச் சுற்றிலும் நடைபாதை, சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும்; ஏரியை புதுப்பித்து படகு சவாரி விட வேண்டும்.
விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். விழுப்புரம் பகுதியில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப மின்நுகர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொய்யப்பாக்கம் அல்லது கா.குப்பம் பகுதியில் புதிய துணை மின்நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும்.
விழுப்புரம் சாலாமேடு, வழுதரெட்டி பகுதிகளில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள், மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்க வேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி வளவனூரில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளவனூர் கடை வீதியில் பல ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் அதிமுக ஆட்சியில் கட்டிய தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க 300 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். மேலும், புதிய தடுப்பணை கட்ட வேண்டும். வளவனூர்- சிறுவந்தாடு சாலை அகலப்படுத்தப்பட வேண்டும்.
மலட்டாறில் இருந்து பிரியும் நரிவாய்க்கால் மூலம் ஏராளமான சிறு ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இப்பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள நீர் வரத்து வாய்க்காலை புனரமைக்க வேண்டும். எல்லீஸ்சத்திரம்அணையை புதிதாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அம்மனுவில் தெரிவித்திருந்தேன்.
மேலே குறிப்பிட்டவற்றில், வளவனூர்- சிறுவந்தாடு சாலைப் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார். மொத்தத்தில் பெரும்பாலான கோரிக்கைகள் பரிசீலனை அளவில் தான் உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT