பழநியில் தக்காளி ரூ.10-க்கு விற்பனை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டிய விவசாயிகள்

பழநியில் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி
பழநியில் குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி
Updated on
1 min read

பழநி: பழநியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. விலை வீழ்ச்சியால் தக்காளியை விவசாயிகள் குப்பை கொட்டிச் சென்றனர்.

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், பழநி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் வசதிக்காக ஒட்டன்சத்திரம், பழநி என அந்தந்த பகுதிகளிலேயே தக்காளி மொத்த மார்க்கெட் இயங்கி வருகிறது. தற்போது அனைத்து பகுதிகளில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட தக்காளி, மார்க்கெட்டுக்கு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.

வரத்து அதிகம் காரணமாக விலை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. பழநி தக்காளி மார்க்கெட்டில் 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி நேற்று ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையானது. அதாவது ஒரு கிலோ தக்காளி மொத்த மார்க்கெட்டில் அதிக பட்சமாக ரூ.10 முதல் ரூ.12-க்கு விற்பனையானது.

கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்ற நிலையில், தற்போது ரூ.10-க்கு மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேவை குறைவாக இருப்பதால் வியாபாரிகள் மொத்த மார்க்கெட்டில் இருந்து குறைந்த அளவு தக்காளி வாங்கி செல்கின்றனர்.

அதனால் விற்பனையாகாத தக்காளியை வேறு வழியின்றி விவசாயிகள் குப்பையில் கொட்டிச் சென்றனர். வியாபாரிகள் கூறுகையில், மழை பெய்து வருவதால் தக்காளி செடிகளுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் வரத்து குறைந்து விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in