

சென்னை: கடந்த 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்டு, அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ் அங்கீகாரம் பெற வரும் 2024 பிப்.29 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கடந்த சில தினங்கள் முன்பு செய்தியாளர்களை சந்தித்த வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 2016-ம் ஆண்டு அக்.20-ம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் விற்பனை செய்யப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 2016 அக்.20 மற்றும் அதற்கு முன்பு அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப் பத்திரம் 2016 அக்.20-க்கு முன் பதிவு செய்யப்பட்டிருப்பின், அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளுக்கும் வரன்முறை கோரி விண்ணப்பிக்க, தமிழ்நாடு ஒப்புதல் பெறாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு எவ்வித மாற்றமும் இன்றி வரும் 2024 பிப்.29 வரை கால நீட்டிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
இத்திட்டத்தில் இணையவழி மூலம் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க இயலும் என்று கூறப்பட்டுள்ளது.