

சென்னை: பிரிவினைவாதத்தின் அடித்தளமே திமுகதான் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
டெல்லியில் வரும் 9-ம் தேதி நடைபெறும் ஜி20 மாநாட்டின் இரவு விருந்துக்கான குடியரசுத் தலைவரின் அழைப்பு கடிதத்தில், ‘இந்திய குடியரசுத் தலைவர்' என்பதற்கு பதிலாக ‘பாரதத்தின் குடியரசுத் தலைவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் திமுக வலுப்படுத்த வேண்டும் என முதல்வர் முன்னிலையில் ஆ.ராசா எம்.பி., பேசினாரே. அவரை தடுக்கவோ, அவரது கருத்துக்கு கண்டனத்தையோ முதல்வர் தெரிவித்தாரா? பிரிவினைவாதத்தின் அடித்தளமே திமுகதான். இந்தியாவோ, பாரதமோ திமுகவுக்கு அது பிரச்சினையில்லை.
உங்களைப் போன்ற பிரிவினைவாதிகளை கவனத்தில்கொண்டே, நமது பாரம்பரியத்தை அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்பதை பாரதம் என சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.