Published : 06 Sep 2023 06:23 AM
Last Updated : 06 Sep 2023 06:23 AM

கோடநாடு வழக்கில் முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும் - கனகராஜ் சகோதரர் தனபால் வலியுறுத்தல்

சேலம்: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்தார்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது அண்ணன் தனபால் மீது கோடநாடு வழக்கில் ஆவணங்களை அழித்ததாக வழக்கு உள்ளது. மேலும், நில மோசடி தொடர்பாக சமீபத்தில் தனபால் கைதாகி ஜாமீன் பெற்றார். இந்நிலையில் அவர் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

மரணத்தில் மர்மம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கோடநாட்டில் நடந்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த விஷயத்தில் என்னுடைய தம்பி கனகராஜ் விபத்துக்குள்ளானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கனகராஜ் மரணத்தில் மர்மம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

என்னை கைது செய்தபோது விசாரித்த அதிகாரி முறையாக நடத்தவில்லை. அடித்து கொடுமைப்படுத்தினார். அவர்கள் எழுதிக் கொடுத்த இடத்தில் கையெழுத்திட்டேன். சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன்.

5 பெரிய பைகள்: ரூ.25 கோடி தருவதாகக் கூறியதால் கோடநாட்டில் இருந்து 5 பெரிய பைகளை கனகராஜ் எடுத்து வந்து கொடுத்துள்ளார். பணத்தை பட்டுவாடா செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையில், கனகராஜ் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோடநாடு சம்பவத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளதால், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x