Published : 06 Sep 2023 06:36 AM
Last Updated : 06 Sep 2023 06:36 AM
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக, உளவுத்துறை முன்கூட்டியே எச்சரித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை மூளிக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன்(34). திருநெல்வேலி மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்தார். கடந்த 30-ம் தேதி இரவில் மூளிக்குளத்தில் ஜெகனை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். மூளிக்குளத்தை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இந்த வழக்கில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத்தில் பிரபு சரணடைந்தார். இந்த கைது நடவடிக்கைக்கு பின்னரே ஜெகனின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.
உளவுத் துறை எச்சரிக்கை: இந்நிலையில் இந்த பிரச்சினையில் அடுத்த திருப்பமாக பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிபாண்டியனை, திருநெல்வேலி சரக டிஐஜியும், மாநகர காவல் ஆணையருமான பிரவேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஜெகன் மற்றும் பிரபு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உளவுத் துறையினர் தகவல் தெரிவித்து வந்தனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளராக பொறுப்பேற்ற காசிபாண்டியனுக்கும், பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரதீப்புக்கும் இது தொடர்பாக உளவுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை காவல்துறை எடுக்கவில்லை.
உளவுத்துறை எச்சரித்தபடி ஜெகன் கொலை செய்யப்பட்டார். பிரச்சினை குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் காசிபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT