

கோவை: ஊழல்களையும், விலைவாசி உயர்வையும் மறைப்பதற்கு சனாதன ஒழிப்பு நாடகத்தை திமுகவினர் கையில் எடுத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவைவந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. எங்கே பார்த்தாலும் போதைப் பொருள் விற்பனை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் சூழலில், மக்களை திசை திருப்ப சனாதன ஒழிப்பு என்ற கருத்தை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம், உயர்ந்த பதவிக்கு போட்டியிட்டபோது திமுகவினர் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இவர்கள் சனாதன தர்மம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பொருத்தவரை மதத்துக்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சியாகும்.
தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பல்லடத்தில் 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 9 கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாள் இல்லை.
திசை திருப்பும் நாடகம்: ஊழல்களையும், விலைவாசி உயர்வையும் மறைப்பதற்கும் இந்த நாடகத்தை திமுகவினர் அரங்கேற்றுகின்றனர். எப்போது எல்லாம் திமுகவுக்கு பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையை கையில் எடுத்து மக்களை திசை திருப்புவது தான் திமுகவுக்கு வாடிக்கையாக உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், முதல்வர் ஸ்டாலின் மகன் என்பதுதான் உதயநிதிக்கு உள்ள தகுதி. ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கலால், பத்திரப்பதிவு, ஜிஎஸ்டி, சாலை வரி என பலவற்றில் வருமானம் அதிகரித்தும், திட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.