Published : 06 Sep 2023 06:14 AM
Last Updated : 06 Sep 2023 06:14 AM
சென்னை: மீன்துறை ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 65 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மீனவ மக்களின் நல்வாழ்வுக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை மீனவமக்களிடம் கொண்டு சேர்த்தல், மீனவ கூட்டுறவுசங்க உறுப்பினர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல், கடல் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களுக்கான சேமிப்பு,நிவாரண திட்டங்களை செயல்படுத்துதல், மீன்பிடி தடைகால நிவாரண உதவித்தொகை வழங்குதல், மீன்பிடி கலன்களை பதிவு செய்தல் மற்றும் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மீன்துறை ஆய்வாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்த பணிகள் தொய்வின்றி நடைபெற, மீன்துறை ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு 65 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் ந.கவுதமன், துறையின் செயலர் மங்கத்ராம் சர்மா, மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT