Published : 06 Sep 2023 06:25 AM
Last Updated : 06 Sep 2023 06:25 AM

திருத்தணி கோயில் பணியாளர்களுக்கு முதல் தவணை ஊதிய நிலுவை தொகை ரூ.2.35 கோடியை அமைச்சர்கள் வழங்கினர்

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளர்களுக்கு 7-வதுஊதிய குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையின் முதல் தவணையை நேற்று முன்தினம் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆர்.காந்தி ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அந்த நிலுவைத் தொகையில் முதல் தவணையாக ரூ.2.35 கோடியை நேற்று முன்தினம் இரவு, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கோயில் பணியாளர்களுக்கு இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து, அவர்கள், திருத்தணி சுப்பிரமணிய கோயிலில் பணிபுரிந்து மரணம் அடைந்த பணியாளர் ஒருவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினர். இந்நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் சேகர்பாபு தெரிவித்ததாவது:

ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி 6 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இருந்தது. அதற்கு காரணம், கோயிலின் மொத்த வருமானத்தில் 20 சதவீதம் மட்டுமே சம்பள செலவின உச்சவரம்பாக அனுமதிக்கப்பட்டிருந்ததுதான். இதுகுறித்து, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதன் விளைவாக, சம்பள செலவின உச்சவரம்பை 25 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆகவே, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலின் 204 பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 8.43 கோடியை 3 தவணைகளாக பிரித்து வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது முதல் தவணையாக ரூ.2.35 கோடி வழங்கப்பட்டுள்ளது.

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வரைவு பணியில், நாதஸ்வரம் மற்றும்தவில் பயிற்சி பள்ளி, திருமணமண்டபங்கள் கட்டும் பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டு நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதர பணிகளை ஒருங்கிணைத்து வெகு விரைவில் அரசாணை வெளியிடப்படவுள்ளது.

அண்ணாமலைக்கு கண்டனம்: எங்களுக்கு பதவி வழங்குவதற்கும், பதவி வேண்டாம் என்று சொல்வதற்கும் முதல்வருக்குதான் அதிகாரம் உண்டு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எப்படி இந்த அதிகாரம் கிடைத்தது என்று தெரியவில்லை. திமுகவை பொறுத்தளவில் சனாதனமும் இந்து மதமும் வாழைப்பழத்தை போன்றது. வாழைப்பழம் என்பது இந்து மதம் என்றால் சனாதனம் என்பது வாழைப்பழத்தின் தோலாகும். தோலை நீக்கிவிட்டு தான் பழத்தை சாப்பிட வேண்டும்.

திமுக கற்கோட்டையாக உள்ளது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிந்து கொண்டிருக்கிறார். திமுக கற்கோட்டையாக இருக்கிறது. இந்த திராவிட மாடல் அரசுக்கு எந்தவிதமான சேதாரமும் வராது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் க.வீ.முரளிதரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சுகபுத்ரா, கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் தரன், எம்எல்ஏ சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x