Published : 06 Sep 2023 06:21 AM
Last Updated : 06 Sep 2023 06:21 AM
சென்னை: உலகளவிலான காவல் போட்டிகளில் வெற்றி பெற்று தமிழக காவல் துறைக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என போலீஸ் விளையாட்டு வீரர்களுக்கு காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.
காவல் துறை விளையாட்டு வீரர்களுக்கு சென்னை புதுப்பேட்டை, ராஜரத்தினம் மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட குத்துச்சண்டை மேடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வைப்பறையை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று திறந்து வைத்தார். மேலும் தடகளம், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கையெறி பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம், கோகோ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களைச் சென்னை காவல் துறை விளையாட்டு வீரர்களுக்கு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை பெருநகர காவல் விளையாட்டு அணிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, தேசிய அளவிலான போட்டிகள் மற்றும்உலக காவல் துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுகளில் பல பதக்கங்களை வென்றுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது வழங்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் மேலும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்துக்காக அரசு ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. வருங்காலங்களில் சென்னை காவல் துறை விளையாட்டு வீரர்கள் சென்னை காவல் துறைக்கும், தமிழக காவல் துறைக்கும் நல்ல பெயர் வாங்கி கொடுக்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை காவல் இணை ஆணையர் (தலைமையிடம்) கயல்விழி, துணை ஆணையர்கள் எஸ்.ராதா கிருஷ்ணன் (தலைமையிடம்) எம்.ராதாகிருஷ்ணன் (ஆயுதப்படை),எஸ்.கோபால் (மோட்டார் வாகனப் பிரிவு) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT