Published : 06 Sep 2023 06:02 AM
Last Updated : 06 Sep 2023 06:02 AM

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா | ஆசிரியர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். உடன் அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி, துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர். படம்: ம.பிரபு

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தையொட்டி, சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் 393 பேருக்கு தமிழக அரசு சார்பில் ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ எனும் பெயரில் மாநிலநல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி, விருது வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை விருந்தினராக பங்கேற்று 393 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

வருங்கால தலைமுறையினரை உருவாக்கும் அனைவருமே நல்லாசிரியர்கள்தான். ஆசிரியர்கள் எவ்வளவு சாதனைகள் படைத்தாலும், செல்வங்கள் சேர்த்தாலும், பெற்ற பிள்ளைகள் நல்ல நிலைக்கு சென்றாலும் தன்னிறைவு அடைய மாட்டார்கள். தன்னிடம் படித்த மாணவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு செல்லும்போதுதான் முழுமையான மகிழ்ச்சியை பெறுவர்.

தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டாலும் ஆசிரியர்களின் இடத்தை அவை ஈடுசெய்ய முடியாது. பள்ளிக்கல்வியின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை முழுமையாக மாணவர்களுக்கு கொண்டு செல்வது ஆசிரியர்கள்தான். அத்தகைய ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அதில் 5 அம்சங்கள் முதல்வரின் கவனத்துக்கு தற்போது கொண்டு செல்லப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் எமிஸ் வலைதள பணிகள் ஒரு மாதத்தில் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் வழங்கப்படஉள்ளது. இனி வருகைப்பதிவை மட்டும் ஆசிரியர்கள் மேற்கொண்டால் போதுமானது. ஆசிரியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றபடும். அதற்கு கைமாறாக நீங்கள் பள்ளிக்கல்வியில் தேசிய அளவில் 2-ம் இடத்தில் உள்ள தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்த உறுதுணையாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழக பாடநூல்கள் கழக தலைவர் ஐ.லியோனி, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குந்தலாடி அரசு நடுநிலைப் பள்ளியில் கணிதவியல் ஆசிரியர் துரை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆங்கில ஆசிரியரான சகுந்தலா தேவி ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கணவன், மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, அரசுப் பள்ளி ஆசிரியரும், பிரபல தன்னார்வ வானிலை ஆராய்ச்சியாளருமான ந.செல்வகுமார் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவர் திருவாரூர் மாவட்டம், செருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x