Published : 06 Sep 2023 06:18 AM
Last Updated : 06 Sep 2023 06:18 AM
சென்னை: குழந்தைகள், வளரிளம் பருவத்தினரை எந்த பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டாம் என என்று தொழிலாளர்துறை சார்பில் அனைத்து வேலை அளிப் போரிடமும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை எஸ்ஐசிசி அரங்கில் வடசென்னையில் குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டறிதல், மீட்டெடுத்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தலில் உள்ள இடர்பாடுகளை கண்டறியும் பொருட்டு விழிப்புணர்வு பட்டறை நடைபெற்றது.
இதில், எந்த பணியிலும் குழந்தைகளையும் மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை அபாயகரமான பணிகளிலும் சட்ட விதிகளின்படி பணியமர்த்தக்கூடாது என்றும், விதிமுறைகளை மீறி அவர்களை பணியமர்த்துவதால் சட்ட விதிகளின்படி அபராதம் மற்றும் சிறை தண்டனைகளுக்கு உள்ளாக நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடுப்பது தொடர்பாக வேலையளிப்போர்களிடம் கருத்து கேட்டறியப்பட்டது.
அதில் வேலையளிப்பவர்கள் சங்கத்தினர் இனி எதிர்வரும் காலங்களில் குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவரையும் பணியமர்த்தமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற உறுதியளித்தனர். அத்துடன், உறுதிமொழி படிவத்திலும் கையொப்பமிட்டனர்.
மேலும் இனி எதிர்வரும் காலங்களில் குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் அரசுக்கு உறுதுணையாக இருந்து,தமிழகத்தில் குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற தங்களின் பங்களிப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள் சி.ஹேமலதா, உ. உமாதேவி, தொழிலாளர் இணை ஆணையர்-1 விமலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT