Published : 06 Sep 2023 06:05 AM
Last Updated : 06 Sep 2023 06:05 AM
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை செப்.30-ம்தேதிக்குள் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துபொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக , திருவான்மியூர் – அக்கரை ஆறுவழி சாலையாக அகலப்படுத்தும் பணி, சென்னை மாநகராட்சி, ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சர் பேசியதாவது: ஒப்பந்ததாரர்கள், ஒப்பந்த காலத்துக்குள் பணிகளை முடிக்கசெய்ய வேண்டியது, சம்மந்தப்பட்ட பொறியாளர்களின் முக்கிய பணியாகும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் உள்ளதால், வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செல்ல வேண்டியபணிகளை உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒப்பந்ததாரர்களின் பணிகள் அனைத்தும் செப்.30-க்குள்முடிக்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஒப்பந்தாரர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையில் நிலுவையில் உள்ள நிலஎடுப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர் குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றை தனி கவனம் செலுத்தி முடிக்க வேண்டும். நில எடுப்புப் பணிகளில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு, காலக்கெடு நிர்ணயித்து பணியாற்ற வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை தொடர்ந்து, பெரிய மேற்கத்திய சாலை, உள்வட்ட சாலை, வளசரவாக்கம் – (ராமாபுரம் வழி) வள்ளுவர் நகர் சாலை, பல்லாவரம் பாண்ட்ஸ் கம்பெனி அருகில் கூடுதல் சிறுபாலப் பணிகள், குரோம்பேட்டையில் கூடுதல் சிறுபாலப் பணி, ஒட்டியம்பாக்கம் ஓடையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம், மேடவாக்கம் –சோழிங்கநல்லூர் - குடிமியாண்டி தோப்பு சாலையில் உயர்மட்ட பாலப் பணி போன்ற அனைத்துப் பணிகளையும் ஆய்வு செய்து விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT