

சென்னை: தெற்கு ரயில்வே மற்றும் ஐ.சி.எஃப்., ஆலையில் கடந்த 2008-ம்ஆண்டு முதல் நடப்பாண்டில் தற்போது வரை தொழில் பழகுநர் என்று கூறப்படும் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து 17,000 பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு இதுவரையில் வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு வேலை வழங்க கோரி, பயிற்சி முடித்தோர் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று 3-வது முறையாக குடும்பத்தினருடன் 4-ம் நடைமேடை அருகே உள்ள பயணிகள் காத்திருக்கும் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள் என 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கூறியதாவது: பல ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகிறோம். எனவே, 2022-ம் ஆண்டு வரை அப்ரண்டீஸ் பயிற்சி முடித்துவர்களை பணிக்கு எடுக்க வேண்டும்.
ரயில்வே அதிகாரிகளுடன் ஏற்கெனவே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தீர்வு காண முடியவில்லை. எங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி, நாங்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த இடத்தில் இருந்து கலைந்து செல்ல போலீஸார் அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதையடுத்து, 225 பேரை போலீஸார் கைது செய்து, எழும்பூர் ரயில்வே மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.