Published : 22 Dec 2017 11:22 AM
Last Updated : 22 Dec 2017 11:22 AM

மருதுறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய விருது

அகில இந்திய அளவில் மாணவர்களிடையே நடைபெற்ற குறும்பட போட்டியில் மருதுறை அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்புக்கு தேசிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், மருதுறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகளுள் ஒன்றான சைக்கிள் நிறுத்துவது குறித்து அண்மையில் குறும்படம் தயாரித்துள்ளனர். பல்வேறு நாடுகள் பங்கேற்ற போட்டியில் இப்பள்ளி மாணவர்களின் படைப்புக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பா.கனகராஜ் கூறும்போது, ‘2017-ம் ஆண்டுக்கான டிஎப்சிஐ கேன் விருது வழங்கும் நிகழ்ச்சி அலகாபாத் நகரில் நடைபெற்றது.

60 நாடுகளில் இருந்து 1700 படைப்புகள் அரங்கேற்றப்பட்டன. எங்கள் பள்ளி ஆசிரியர் இரா.சு.கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி, ஐந்து மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். மிதிவண்டிகள் நிறுத்திவைக்கும்போது அவை அடிக்கடி கீழே விழுகின்ற பிரச்சினைக்குத் தீர்வு காண்பது பற்றிய ஆவணப்படம் மற்றும் செயல்திட்டத்தை உருவாக்கினர்.

இப்படைப்பு, போட்டியில் முதல் இடம் பெற்று விருதுக்குத் தேர்வானது. இதற்கான விருது மற்றும் பரிசுத் தொகையாக ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 2015-ம் ஆண்டும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது’என்றார்.

விருது பெற்ற ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x