Published : 05 Sep 2023 04:23 PM
Last Updated : 05 Sep 2023 04:23 PM

விபத்துக்கு விதையாகும் வெட்டவெளி சிலிண்டர்கள்: தாம்பரத்தில் அச்சுறுத்தலுக்கு அச்சாரம்

திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள காஸ் சிலிண்டர்கள்.

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி பகுதியில் சாலையோரங்களில் காஸ் சிலிண்டர்களை மொத்தமாக அடுக்கி வைத்து, பின் வீடுகளுக்கு விநியோகம் செய்கின்றனர். பகல் முழுவதும் வெயிலில், வெட்ட வெளியில் பாதுகாப்பின்றி கிடக்கும் சிலிண்டர்கள் வெப்பத்தால் அழுத்தம் ஏற்பட்டு விபத்து அபாயம் நிலவுகிறது.

தாம்பரம் மாநகரில் காஸ் வாடிக்கையாளர்களுக்கு டீலர்கள் மூலம் சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படுகின்றன. இங்கு, காஸ் நிரப்பிய சிலிண்டர்களை குடோன்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு பதிலாக, குடியிருப்புகள் நிறைந்த தெருக்களில் மொத்தமாக ஏஜென்சியினர் இறக்கி விட்டு செல்கின்றனர்.

குறிப்பாக வீடுகள் நெருக்கம் மிகுந்த இடங்களில், 50-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலிண்டர்களை விநியோகித்து முடிக்க ஒரு வாரம் ஆகிவிடும். அதற்குள் அடுத்த சிலிண்டர்கள் கொண்டு வந்து அதே இடத்தில் அடுக்கி வைக்கப்படுகின்றன. எப்பொழுதும் இங்கே சிலிண்டர் குவியலை காண முடிகிறது.

சாலையோரம் கேட்பாரற்று கிடக்கும் இந்த சிலிண்டர்கள் மீது அவ்வழியே செல்லும் வாகனங்கள் மோதினால் கூட விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள இப்பகுதி மக்கள், இதுகுறித்து காவல்துறை, ஏஜென்சியினரிடம் வலியுறுத்தியும் பலனில்லை.

அண்மையில் தாம்பரத்தில் வெடித்த
சிலிண்டர் ஒன்று.

குடோனை ஏற்பாடு செய்து, அங்கிருந்து சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும். சிலர் சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு சென்று விநியோகம் செய்யாமல், சாலையோரம் குவித்து வைத்து விநியோகம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். சாலையோரங்களில், பாதுகாப்பு இல்லாமல், சிலிண்டர்களை வைத்து விட்டு செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரவணன்

இது குறித்து சமூக ஆர்வலர் சரவணன் கூறியது: கடந்த பல ஆண்டுகளாக இங்கு தான் காஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்படுகின்றன. பொதுவாக எந்தவொரு விபத்தும் நேரிடும் வரை விழிப்புணர்வு பிறப்பதில்லை. எனவே பெரும் விபத்து நேரும் முன்பு, குடியிருப்புவாசிகளின் நலன் கருதி, காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பாக வைப்பதற்கு குடோன் வசதியை ஏஜென்சியினர் ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் தாம்பரம், இரும்புலியூர் பகுதியில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாருக்கும் விபத்து ஏற்படவில்லை. இது தொடர்பாக பீர்க்கன்காரணை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் இரவு, பகல் என சிலிண்டர்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதற்காக நிரந்தரமாக ஒரு லாரியை நிறுத்தி வைத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் சிலிண்டர்களை ஏற்றி இறக்கும் போது ஏற்படும் சத்தத்தால் இரவில் தூங்க கூட முடியவில்லை. மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலிண்டர்களை கையாளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஸ் சிலிண்டர்களை பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பிய குடோன்களில் தான் இருப்பு வைக்க வேண்டும் என தெரிந்தும், காஸ் விநியோகஸ்தர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள். எண்ணெய் நிறுவனங்களும் இதை கண்டு கொள்வதே இல்லை. அவ்வப்போது குடோன், அலுவலகங்களுக்கு சென்று பரிசோதனை செய்வதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். ஏஜென்சி அறிவுறுத்தல்

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத காஸ் ஏஜென்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, வீடுகளுக்கு சென்று சமையல் சிலிண்டர்களை சப்ளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளோம். அதையும் மீறி சாலையோரம் வைத்து சப்ளை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அ.இரஹ்மத்துல்லா

தேசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும், நுகர்வோர் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம் மாநில இணை செயலாளர் அ.இரஹ்மத்துல்லா கூறியது: சிலிண்டர்களை சாலையோரங்களில் வைத்து விநியோகம் செய்வது, திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு விநியோகம் மற்றும் விநியோக ஒழுங்கு முறை சட்டம் 1993-ன்படி குற்றமாகும்.

ஆனால் ஒவ்வொருமாவட்டங்களிலும் எரிவாயு உருளை விநியோகஸ்தர்கள் விதிகளை புறக்கணித்து சாலை ஓரங்களில் வைக்கின்றனர். இது மிகப்பெரிய விபத்துக்கு வழிவகுக்கும். நீர்மம் ஆக்கப்பட்ட வாயு உருளைகள் வெளியில் வைக்கும்போது உள்ளே அழுத்தம் அதிகரித்து, வெடிப்பதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்படும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் இதனால் பாதிக்கப்படுவர். ஒவ்வொரு மாவட்டத்திலும் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் மாதந்தோறும் நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளை மாவட்ட நிர்வாகம் தடுப்பதற்கு ஏன் யோசிக்கிறது என்பது தெரியவில்லை. இவ்வாறு கூறினார். மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x